edappadi palanisamy

கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

என்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்தில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். எவ்வளவு வெளிநாட்டு முதலீடு ஈர்த்து உள்ளார். அவர் சொல்வது எல்லாம் பொய்யான செய்தி. தி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.26 ஆயிரம் கோடி தான் தமிழகத்தில் தொழில் முதலீடு வந்தது.

ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் ரூ.73 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 67 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. ஒரு புரிந்துணர்வு போட்டால் உடனே அந்த திட்டத்தை தொடங்கி விட முடியாது. அந்த தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும், முழு பணத்தை வைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது. வங்கியில் கடன்பெற்று தான் செய்ய முடியும்.

Advertisment

Advertisment

அதன்படி பெரிய தொழில் செய்ய வேண்டுமென்றால் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகி விடும். சிறிய தொழில் தொடங்க வேண்டுமென்றால்கூட 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுகூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை எங்களை குறை சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை.

தற்போதைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் சுமார் 8 ஆயிரத்து 895 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். அது தொடர்பாக தொழில் அதிபர்கள் தொடர்ந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவரது பாராட்டை வைத்துக் கொண்டா? இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியது தான். எனவே ஒரு திட்டத்தை தொடங்கும் போது உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியாது. அது அவருக்கு தெரியும். ஆனால் பாராட்டுவதற்கு அவருக்கு மனம் இல்லை என்றார்.