அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை தூக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து ஜெயலலிதாபோல் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டார் என்று அதிமுகவில் பரபரப்பு நிலவியது.
தான் முதல் அமைச்சரை சந்திக்கும் எண்ணத்தில் இல்லை என்று சொல்லி வந்த மணிகண்டன், தற்போது முதல் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதால், அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் மணிகண்டன்.
எடப்பாடி பழனிசாமி மீது ஏக கடுப்பில் இருக்கும் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சீக்ரெட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன் என தனது நட்பில் இருக்கும் அமைச்சர்களிடம் சொல்லி வருகிறாராம். மேலும் கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் ஆதாரத்துடன் அளிக்க உள்ளாராம். இந்த செய்தி எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் பீதியை கிளப்பியுள்ளதாம்.
இந்த நிலையில் மணிகண்டன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப்போகிறார் என்று தகவல்கள் பரவியது. எடப்பாடி பழனிசாமி தன்னை அரவணைக்காவிட்டால் திமுகவில் இணையும் திட்டத்தில் மணிகண்டன் உள்ளாராம். அதிமுகவில் இருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு அமைச்சர்கள் சொத்து விவரத்தை டெல்லிக்கு அனுப்புவதாக சொல்லும் மணிகண்டன், திமுகவில் இணைந்துவிட்டால் மேலும் என்னென்ன சொல்லுவாரோ என்ற பீதியில் உள்ளனர் ஆளும் கட்சியினர்.