2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, திடீரென சேலம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிதொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்ற விமர்சனம் எழுந்ததும்,சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தி, அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டஅமைச்சர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்குப் பிறகும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்கள் முன்பு டெல்லி பயணம் மேற்கொண்டஎடப்பாடி பழனிசாமி, இன்று (20.01.2021) மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இன்றும் நாளையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ஸ்ரீபெரும்புதூர் வழியே செல்லும்போது அங்கு உள்ள இராமானுஜர் திருக்கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனத்தின்போது கோசாலையில்உள்ள மாடுகளுக்கு உணவளித்தார். அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகே, ஓஎம்ஆர் சாலையில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அப்போது ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் 1988ம் ஆண்டு மே 30ஆம் தேதி திருப்போரூர் வந்த ஜெயலலிதா இதே இடத்தில் வேனில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது சென்டிமென்டாக அதே இடத்தை அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் என ‘ரர’க்கள் தெரிவிக்கின்றனர்.