Skip to main content

நெருங்கிய விஜிலன்ஸ்... நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி..! பரபரப்பு பின்னணி! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Close vigilance .. Edappadi Palanisamy in crisis!

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சக்தி வாய்ந்த முகமாகத் திகழ்ந்த மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். 

 

சென்னையில் உள்ள இளங்கோவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடுகளிலும் விஜிலன்ஸ் சோதனை நடத்தியிருக்கிறது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இளங்கோவன் 25 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச்சந்தைகளிலும், 45 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 5.50 லட்சம் ரூபாய்க்கு அந்நிய செலாவணி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் சொல்கிறது விஜிலன்ஸ். சரியான சோர்ஸ் காட்டாத பட்சத்தில் இளங்கோவன் மீது ஃபெமா சட்டத்தின் கீழும் வழக்குப் பாயக்கூடும் என்கிறார்கள்.

 

இளங்கோவன் குறித்து பேசிய சில ர.ர.க்கள், ''ஆத்தூர் இளங்கோவன் சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாயார், வேகவைத்த பலாக்கொட்டை வியாபாரம் செய்தார். இளங்கோவனை சித்தப்பாதான் வளர்த்துள்ளார். பூர்வீக சொத்து என்பது 1.50 ஏக்கர் தரிசு நிலம். பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில்தான் படித்தார். சேலத்தில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இளங்கோவனின் மாமா கருப்பையா நடத்திவந்த டீக்கடையில் வேலை செய்தார். டீக்கடையும் இந்திய அரசியலும் சென்ட்டிமெண்ட்டானவை.

 

எம்ஜிஆர் ஆட்சியின்போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அன்பரசு என்பவருக்கு உதவியாளரானபோது, அரசியல் தொடர்பு ஏற்பட்டது. உள்ளூரில் சில அரசு ஒப்பந்தப் பணிகளை இளங்கோவன் பெயரில் எடுத்து செய்துவந்தார் அன்பரசு. பின்னர், மா.செ.வான டி.எம். செல்வகணபதி மூலம், 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாண கிரி வார்டில் எப்படியோ சீட் வாங்கி, செல்வகணபதியை வரவைத்து வாக்குறுதியுடன் பிரச்சாரம் செய்யச் செய்து, வெற்றியும் பெற்றார் இளங்கோவன். பின்னர் மா.செ.வான மஞ்சினி முருகேசனிடம் ஒட்டிக்கொண்டு, அவருக்குத் தேவையானதை நிறைவேற்றினார். மஞ்சினியிடம் எல்லா வகையிலும் திறமையான ஆள் ஒருவர் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவர, இளங்கோவனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தேவையானவற்றை நிறைவேற்றித் தந்தார் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி மூலமாக செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ராவணன் எனத் தொடர்பு ஏற்பட்டு, ஜெ. வரை அறிமுகம் கிடைத்தது. 2013இல் இளங்கோவனுக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை 'பெரியவர்' என்றும், இளங்கோவனை 'சின்னவர்' என்றும் சொல்லும் அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

 

அதிமுகவில் இருக்கும் 'சித்தப்பு' நடிகர் ஒருவருக்கும் இளங்கோவனுக்கும் நல்ல நெருக்கம் உண்டு. அதன் மூலம் பெரிய மனிதர்களின் பசிக்கான தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. 2016 தேர்தலில், பறக்கும் படையினரே யூகிக்க முடியாத வகையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து, அங்கிருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து எடப்பாடி பழனிசாமியை அசத்தினார் இளங்கோவன். 2017இல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் இளங்கோவனின் அதிகாரம் பெரிய அளவில் கொடிகட்டி பறந்தது.

 

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், இளங்கோவன் தன்னிடம் 'லிக்விட்' ஆக இருந்த பணத்தை எல்லாம் ஆத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மூலமாக சிலருக்கு மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சில பைனான்ஸ் அதிபர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும் முதலீடாக கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்போது விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவனின் வலதுகரமான குபாய் என்கிற குபேந்திரனும்கூட பண மதிப்பிழப்பு காலத்தில்தான் பெரிய அளவில் நகைக்கடைகளை விரிவாக்கம் செய்திருக்கிறார். உஷாராக முன்கூட்டியே ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும், ரெய்டில் விடுபட்டவர்களையும் தோண்டித் துருவும்போது, எடப்பாடி பழனிசாமிவரை சிக்கல் நீளும்" என்கிறார்கள் இளங்கோவனை அறிந்தவர்கள். தனக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வரைக்கும் விஜிலன்ஸ் ரெய்டு நடந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி ஒருவித அச்சத்தில் இருக்கிறார் என்கின்றனர் அவரது வட்டாரத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து நிறம் மாறும்'- டி.டி.வியை கடுமையாக சாடிய இபிஎஸ்  

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Even a chameleon changes color after a while' - EPS slams TTV

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் அமமுகவின் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதிமுக சார்பில் தேனியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், ''ஒன்றிய செயலாளர்கள், கட்சிக்கு உழைப்பவர்கள், கட்சிக்காக பாடுபடுபவர்கள், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு சீட்டு கொடுப்பதில் என்ன தவறு. ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு சீட் கொடுத்து என்ன பயன்? அவர்களைப் போய் பார்க்க முடியுமா? நாட்டு மக்களுக்காக போராடி திட்டங்களை வாங்கித் தருவார்களா? இல்லையே. அவர்களுடைய சொந்த லாபத்திற்காக அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்திற்கு வந்து பயனடைவதற்காக போட்டியிடுகிறார்கள். நம்முடைய அதிமுக வேட்பாளர் அப்படி அல்ல அவர் மக்களுக்காக உழைப்பதற்காக போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் பலர் பலவிதமாக பேசுகிறார்கள். ஒருத்தர் பேசுகிறார்'' என டி.டி.வி.தினகரன் பேசும் பழைய வீடியோ காட்சி ஒன்றை  எல்.இ.டி திரையில் ஓட விட்டார். அதில் பேசிய டி.டி.வி.தினகரன், 'பிஜேபி நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற கட்சி. அவர்கள் டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கலாம். பெரிய கட்சியாக இருக்கலாம். இங்கு நோட்டாவோடு போட்டிப் போடுகின்ற கட்சி. அதுதான் உண்மை' என்ற காட்சி ஓடி முடிந்தது.

மீண்டும் பேச ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி, ''பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து நிறம் மாறும். ஆனால் இவரெல்லாம் அடிக்கடி நிறம் மாறுகின்றவர்கள். இவர்களை நம்பி நீங்கள் ஓட்டுப் போட முடியுமா? இத்தனை நாளா ஏன் இந்த மக்களை வந்து பார்க்கவில்லை. இந்த மக்களின் கஷ்டம், துன்பம், துயரம் பற்றி ஏதாவது கேட்டீங்களா? இவருக்கு ஓட்டுப் போட்டு என்ன பிரயோஜனம். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதும் மீண்டும் லேப்டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்''என்றார்.

Next Story

'தமிழ்நாட்டுக்கு உங்களை அடையாளம் காட்டியதே நாங்கள் தான்'-ராம சீனிவாசனுக்கு இபிஎஸ் பதில்

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
admk

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு அதிமுக காணாமல் போய்விடும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் கடலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், 'இன்றைக்கு மதுரையில் பாஜக கட்சியை சேர்ந்த பொதுச்செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அவர் பெயர் ராம சீனிவாசன். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றி, கட்சியை பற்றி பேசுகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடுமாம். கண்டுபிடித்துக் கொடு நீ... உன்னை போல எத்தனை பேரை பார்த்தவர்கள் அதிமுககாரர்கள். அதிமுகவின் வரலாறு உனக்கு தெரியுமா? நான் உட்பட மேடையில் இருக்கின்ற அத்தனை பேரும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் இந்த கட்சிக்கு உழைத்தவர்கள்.

உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உழைப்பை நம்பி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய கட்சி நடத்துகிறோம். உங்களை போல வெட்டி விளம்பரத்தில் நாங்கள் அரசியல் நடத்தவில்லை. 30 ஆண்டுகால மக்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்து இன்று மக்களுடைய ஆதரவைப் பெற்று  தமிழகத்தில் அதிக தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

எங்களைப் பார்த்து 2024க்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறீர்களா? பொறுத்திருந்து பாரு இந்த தேர்தலோடு உன்னை போல் வெட்டி அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இந்த தேர்தலோடு அடையாளம் காணாமல் போய்விடுவார்கள். இதுதான் எதார்த்தம். 1998 ஆம் ஆண்டு  நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். அப்பொழுதுதான் பாஜகவுடன் கூட்டணி வைச்சோம். அப்பொழுதுதான் தாமரை சின்னம் என மக்களுக்கே அடையாளம் காட்டியது ஜெயலலிதா. உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டுச்சு எங்களைப் பார்த்தா அடையாளம் காணாமல் போய்விடும் என்று சொல்கிறீர்கள்'' என ஆவேசமாக பேசினார்.