Advertisment

எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், இராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும் முயற்சிகள், அத்தகைய முயற்சிகளில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

Advertisment

anbumani

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரப்பளவில் விவசாயம் நடைபெறுவது காவிரி பாசன மாவட்டங்களில் தான். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தையும் சேர்த்துக் கொண்டால் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியம் என்ற நிலையிலிருந்து படிப்படியாக எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றப்பட்டு வருகிறது.

இதற்கான முதல் விதை 30 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்டது. 1989&ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு 28.08.1989 அன்று தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அப்போதிலிருந்து தான் காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுவது தொடங்கியது. இப்போது தமிழகம் முழுவதும் 700&க்கும் கூடுதலான எண்ணெய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 219 எண்ணெய் கிணறுகளை ஓஎன்ஜிசி நடத்தி வருகிறது. மேலும் 104 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

அதைத் தொடர்ந்து 2010&ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுக்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் வாயுத் திட்டங்களும், அவற்றின் தொடர்ச்சியாக பாறை எரிவாயு திட்டங்களும் செயல்படுத்தப்படவிருந்தன. ஆனாலும், இத்தகைய திட்டங்களை அனுமதிக்க முடியாது என்பதில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு உறுதியாக இருந்ததாலும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் மீத்தேன் திட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே, தமிழகத்தின் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு அளித்திருந்த உரிமமும் முடிவுக்கு வந்ததால் மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தமிழகம் தப்பியது.

எனினும், 2017&ஆம் ஆண்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்த பின்னர், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியது. எனினும் அந்த கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

ஆனாலும், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களாலும் டெல்டாவுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் சாயப்பூங்காவும் காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளத்திற்கும், நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடிக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் காவிரி பாசனப் பகுதிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பாசனப் பகுதிகளில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்த நைஜீரியாவில் ஏற்பட்ட பேரழிவை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் காவிரிப் பாசன மாவட்டங்களைப் போலவே நைஜீரியாவின் நைஜர் நதிப் பாசனப் பகுதிகளும் வளம் கொழிக்கக்கூடியவையாகும். அப்பகுதியில் வேளாண்மை வெற்றிகரமாக நடைபெற்று வந்ததால் அங்கு ஏழைகளே இல்லை என்ற நிலை இருந்தது. ஏழைகள் இல்லாததால், திருடர்கள் பயமோ, கொள்ளையர்கள் பயமோ இல்லை. அங்குள்ள மக்கள் வெளியில் செல்லும்போது தங்களின் வீடுகளைப் பூட்டாமல் செல்லும் அளவுக்கு அங்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவி வந்தது.

ஆனால், நைஜர் டெல்டாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியது. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதால், நைஜர் பாசன மாவட்டங்களில் பணம் கொட்டத் தொடங்கியது. அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக, எண்ணெய் வளத்தை அனுபவிக்கவும், புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளில் சேரவும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அதே நேரத்தில், எண்ணெய்க் கிணறுகளால் பாசனம் பாதிக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்பட்டனர். அடக்குமுறையை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

eps

மற்றொருபுறம் எண்ணெய் வளத்தின் பயன்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கவில்லை. அவர்களுக்கு சொந்தமான வளங்களும் சுரண்டப்பட்டன. அதனால், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறினர். ஒரு கட்டத்தில் எதுவுமே கிடைக்காத ஏழைகள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளச் சட்டவிரோத வழிகளைக் கடைப்பிடித்தனர். இதனால், துப்பாக்கி கலாச்சாரமும், மோதலும் அதிகரித்தது. நைஜீரியாவில் இப்போது அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களிலும் அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பா.ம.க. போராடுகிறது.

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி, அத்திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் இருந்து பெற்றேன். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன்.

தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகளிலேயே பா.ம.க.தான், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியது. 2016&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் இதற்கான வாக்குறுதியை அளித்திருந்தது. அதுமட்டுமின்றி, 2019&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் முதன்மை கோரிக்கை என்பதை தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தங்களிடம் வேறு சில தருணங்களிலும் வலியுறுத்தியுள்ளேன். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தங்கள் ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, இராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து அந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

anbumani ramadoss Edappadi Palanisamy letter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe