TN BJP President L. Murugan

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை, தமிழகத்தில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ஆனால், இதில் நடக்கும் ஊழல்களால் சர்ச்சைகள் வெடித்தன. இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அரசியல் தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், முதல்வர் எடப்பாடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள்.

மேலும் சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என இ-பாஸ் முறையால் அவதிக்கு உள்ளாகும் குமுறல்கள் நமக்குச் செய்தியாக வந்து சேர்கின்றன.

Advertisment

மேலும், இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே, மக்கள் படும் சிரமத்தைக் கருதி, தமிழ்நாடு அரசு, தமிழகத்திலும் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார் முருகன்.