Advertisment

“முதல்வர் மு.க. ஸ்டாலினை தமிழக மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்” - துணை முதல்வர்

Dy CM says People of Tamil Nadu strongly believe in cm MK Stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “2024ஆம் ஆண்டு பல்வேறு புதுமைகளையும் அனுபவங்களையும் நினைவுகளையும் நமக்குத் தந்துவிட்டு விடைபெறுகிறது. 2025ஆம் ஆண்டு புத்தாண்டில், முக்கடல் கூடும் குமரியில் திராவிட மாடல் அரசு நடத்திய திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிலிருந்து தொடங்குகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 2024இல் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது.

Advertisment

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 2024இன் தொடக்கத்திலேயே லட்சோப லட்சம் இளைஞர்கள் பங்கேற்புடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் திமுக இளைஞர் அணியின் மாநில மாநாட்டை நடத்தியதை, இன்று நினைத்துப் பார்க்கிறோம். 2024 மக்களவைத் தேர்தல் களத்தில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் பாசிச சக்திகளையும் அடிமைகளையும் வீழ்த்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் திமுக பாதுகாத்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடெங்கும் துறை ரீதியிலான ஆய்வு, மக்கள் நலத்திட்டங்கள் வழங்குதல், புயல், மழை நேரத்தில், மக்களுடன் களப்பணியாற்றிய தருணங்கள் என, ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை என்கிற அளவுக்கு 2024இல் சுற்றிச்சுழன்று பணியாற்றியிருக்கிறோம்.

Advertisment

கலைஞர் நூற்றாண்டில் திமுக இளைஞர் அணி சார்பில் என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டியை நடத்தி, 182 இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கலைஞர் நூலகங்களைத் திறந்திருக்கிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் புதிய உத்வேகத்துடன் பிறக்கும் 2025ஆம் ஆண்டிலும் தொடரும். திமுகவையும் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது கலைஞரின் உழைப்பால், கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் வியர்வையால், தியாகத்தால் உண்டான பந்தம். புழுதிகளால் சூரியனை மறைக்க முடியாது. 2026இல் நம் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் பெறவிருக்கும் மாபெரும் வெற்றிக்கு 2025ஆம் ஆண்டு நாம் ஆற்றப் போகும் களப்பணி ஆதாரமாக விளங்கட்டும்.

தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் காட்டிய சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என்ற முற்போக்குப் பாதையில் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரம் பற்றி பயணிப்போம் என்கிற உறுதியோடும் நம்பிக்கையோடும் புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe