நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், தமது கட்சியினரே தமக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டதாக காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ''தேர்தலில் பணத்திற்காக விலை போய்விட்டார்கள் எனது நண்பர்கள் என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். யார் யார் ஃபோனில் என்ன பேசினார்கள் என்பதற்கான டேப் என்னிடம் உள்ளது. யார் யார் எவ்வளவு வாங்கினார்கள் என்பது என் கையில் இருக்கிறது. அதேபோல் யார் யார் மூலமாக வாங்கினார்கள் என்பதும் எனக்கு தெரியும்''என்றார்.