Advertisment

திருச்சி - மும்பை முதல் விமான சேவையைத் தொடங்கி வைத்த துரை வைகோ!

Durai Vaiko inaugurated Air India Express's first flight from Trichy to Mumbai

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து திருச்சிக்கு தேவையான விமான சேவை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ முன்வைத்தார். அந்தக் கோரிக்கைகளில் முதன்மையாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் திருச்சி - மும்பை முதல் விமான சேவை தொடக்க விழா திருச்சி விமான நிலையத்தில் நேற்று (30-03-25) நடைபெற்றது. இந்த நிகழ்வில், துரை வைகோ கலந்து கொண்டார்.

Advertisment

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட துரை வைகோ கேக் வெட்டி, திருவிளக்கேற்றி தொடங்கி வைத்ததுடன், முதல் பயண அனுமதிச்சீட்டு (Boarding Pass) வழங்கி பயணிகளை வழி அனுப்பி வைத்தார். இது குறித்து பேசிய துரை வைகோ, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவையில் திருச்சிக்கு பெரும் பயன் உருவாகும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.குறிப்பாக இந்த திருச்சி - மும்பை விமான சேவையானது, மும்பையில் இருந்து புறப்படும் பல வெளிநாட்டு விமானங்களை இணைக்கும் இணைப்பு விமான சேவையை போல மிகவும் அவசியமானதாக செயல்படும். இதனால் அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஏழை எளிய நடுத்தர திருச்சி மற்றும் மத்திய மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக பலர் வரவேற்கின்றனர். உள்ளபடியே மனம் மகிழ்கிறேன்.

Advertisment

Durai Vaiko inaugurated Air India Express's first flight from Trichy to Mumbai

இதற்கு முன்பு திருச்சிக்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் திருச்சி - சென்னை வழித்தடத்தில் முதல் உள்நாட்டு போக்குவரத்து சேவையை கடந்த 22.03.2025 அன்று சென்னையில் நான் தொடங்கி வைத்து, பயணிகளோடு உரையாடி, அவர்களோடு இணைந்து பயணித்து திருச்சி வந்தடைந்தேன். இங்கும் எனக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அந்தப் பயணத்தில் அமைச்சர் கே. என். நேருவும் இணைந்து சிறப்பு செய்தார்.அந்த, திருச்சி - சென்னை இரு வழித்தடத்தில் பயண சீட்டு நிறைந்து பயணிப்பதுடன், சுமார் 60% முதல் 70% கட்டண குறைப்பும் சாத்தியமாகியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகும்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினருக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் பல புதிய விமான போக்குவரத்து சேவை பற்றி அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி. டி.சி. சேரன், திருச்சி விமானநிலைய இயக்குநர், பாதுகாப்பு அதிகாரிகள், பரிசோதனை அதிகாரிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.

inaugurate flight trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe