“DTV is gone; It is better if the rest also go”- Jayakumar

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தொடர்ந்து பழனிசாமி தரப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “அதிமுகவில் பிரிவும் இல்லை பிளவும் இல்லை. கட்சியிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்த சில பேர் நீக்கப்பட்டுள்ளனர். 66 எம்.எல்.ஏக்களில் 62 எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் தான் உள்ளனர். தலைமைக் கழக நிர்வாகிகள் 75 பேர் அதிமுகவில் தான் இருக்கிறார்கள். பிறகு எப்படிப் பிரிவு என சொல்லுகிறீர்கள். கடலிலிருந்து சிறு டம்ளரில் நீரை எடுத்துவிட்டால் கடல் குறைந்துவிடுமா. அதிமுக என்பது கடல் போல் உள்ளது.

சிலரைப் பொதுக்குழு நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினால் அவர்களை எப்படித் தனி சக்தியாக எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் எல்லாம் அணிகள் அல்ல பிணிகள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஜி20 மாநாட்டிற்கு பழனிசாமியை அழைத்துள்ளனர்.

Advertisment

ஏற்கனவே பழனிசாமி சொல்லிவிட்டார். அவர்களுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. அவர்களை இணைத்துக் கொள்ளும் சூழ்நிலையும் எந்தக் காலத்திலும் இல்லை. டிடிவி தினகரன் நாங்கள் என்றும் வர மாட்டோம் எனச் சொல்லுகிறார். ரொம்ப நல்லது. அவர் பாதையில் அவர் போகட்டும். மீதமுள்ளவர்களும் அதே போல் சென்றுவிட்டால் போதும்” என்றார்.