ADVERTISEMENT

"நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது" - கி.வீரமணி

06:24 PM Apr 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.

பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சட்ட மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ''தொழிலாளர் உரிமையை பறிக்கும் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (21.4.2023) அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று (21.4.2023) சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட வெளிநடப்பு செய்துள்ளன.

'வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப்படும்' என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் பேசுகையில், 'வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்து விட்ட பிறகு, ஐந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

நாளொன்றுக்கு 14 மணி நேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணி நேரம் 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு. இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இதில் நெகிழ்வுத் தன்மை எங்கிருந்து வந்தது? சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோநிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும் நலனுக்கும் எதிரானதல்லவா.

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல. இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கியமாகக் கருத்தூன்றி கவனிக்கப்பட வேண்டாமா. விரும்பியோர் 12 மணி நேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒரு வகை உழைப்புச் சுரண்டலே. எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் ‘திராவிட மாடல்’ நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கப்படும், மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதியாகவே நம்புகிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT