Advertisment

கேள்விக்குறியான இரட்டை இலை - சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே சின்னம்

nn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதில், 'தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்காததால் தற்போது வரை அதிமுகவில் இரட்டைத்தலைமையே நீடிக்கிறது. ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி தரப்பு என இருவருமே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இருவருமே இரட்டை இலை சின்னத்தையே கோருவார்கள். இரட்டை இலை சின்னத்திற்கான படிவத்தில் அதிமுக தலைமை பதவியில் இருப்பவர்களே கையெழுத்திட முடியும் என்ற சூழலில் சின்னத்துக்கான படிவத்தில் கையெழுத்திடத்தயாரென ஓபிஎஸ் கூறினாலும், அதை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லை. இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கோரிக்கை விடுத்தால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியே என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

admk Political
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe