/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/356_11.jpg)
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.
அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல், அரசியல் கட்சிகள் சார்பிலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்து பச்சரிசி, சர்க்கரை உடன் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ''தலைவலி தீர்வதற்குள் வயிற்று வலி வந்த கதையாக கரும்பு பிரச்சனை முடிவதற்குள் வேட்டி, சேலை பிரச்சனை வந்துவிட்டது. பொங்கலுக்கு அரசு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வேட்டி, சேலை திட்டத்திற்கு உதவாத தரமற்ற நூல்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்குத்தரப்பட்ட நூல் பேல்களை தரம் இல்லை என அரசுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். தரமான நூல் தந்தால்தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என நெசவாளர்கள் கூறியுள்ளனர்'' எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எடப்பாடி பழனிசாமி அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று பொங்கலுக்குவழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளின் தரத்தினை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே 487.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சியைப் பற்றி குறை சொல்லுவதற்கு ஏதும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மனம் போன போக்கில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். எனவே குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி மக்களைக் குழப்ப வேண்டாம்” என அமைச்சர் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)