document handling;  CV Shanmugam Complaint against OPS supporters at  police station

Advertisment

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் கடந்த 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 21ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அலுவலகத்தினுள் ஆவணங்களும், பொருட்களும் கீழே சிதறியிருந்தது.

அலுவலகத்தை திறந்து பார்வையிட்டபின், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு வந்த பரிசுப் பொருட்களும், சில விலை உயர்ந்த பொருட்களும் காணமல் போயுள்ளது என்று இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை இராயப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அதிமுக அலுவலகத்திலிருந்த பொருட்கள், ஆவணங்களை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் புகாரில், அண்ணா சாலையில் உள்ள சபையர் தியேட்டரின் அசல் பத்திரம், கோவை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட அதிமுக அலுவலக அசல் பத்திரங்கள் காணவில்லை. அதிமுகவுக்கு சொந்தமான மொத்தம் 37 மோட்டர் வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்களையும் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.