'Do you know how much it hurts?'-pmk Anbumani Ramadoss speech

Advertisment

தமிழகத்தில் குட்கா தடை செல்லாது என்ற தீர்ப்பு வலியைத்தருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''குட்கா தடைச் சட்டம் தமிழகத்தில் செல்லாது என்கிறார்கள். இது எவ்வளவு வலிக்குது தெரியுமா? இதே பிரச்சனை தெலங்கானா நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால், தெலங்கானாவில் உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு குட்கா தடைச் சட்டம் நீடிக்கும் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். தெலங்கானா தலைமை நீதிபதி குட்காவை தடைசெய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால், இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீதிமன்றம் தடையை ரத்து செய்துள்ளது.

நீதிமன்றம் இதனை பரந்த பார்வையில் பார்க்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் சின்ன சின்ன ஓட்டைகளை பார்க்க வேண்டும். தமிழக அரசு குட்கா தடைசட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த தடைசட்டத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் மத்திய அரசு நிரப்ப வேண்டும். அதற்கு அவசரசட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று இங்குள்ள முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

Advertisment

அடுத்தது ஆன்லைன் சூதாட்டம். அதற்கான தடை மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து போட மறுக்கிறார். என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை? அவசர சட்டத்திற்கு கையெழுத்து போட்ட ஆளுநர் அதை அப்படியே மசோதாவாக கொண்டு வருவதற்கு கையெழுத்திட மறுக்கிறார். இரண்டு மாதமாக ஆளுநரிடம் அது தொடர்பான கோப்புகள் இருக்கிறது. இந்த இடைக்காலத்தில் நமக்கு தெரிந்து 12 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த 12 பேருடைய மரணத்திற்கு யார் காரணம்? ஆளுநர் தான் காரணம். ஆளுநரின் கையில் தான் அந்த 12 பேரின் ரத்தம் இருக்கிறது. தமிழக இளைஞர்களின் நலன் கருதி; தமிழ் மக்களின் நலன் கருதி உடனடியாக ஆளுநர் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவுக்கு கையெழுத்திட வேண்டும். இல்லையேல் என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.இது எச்சரிக்கை'' என்றார்.