Skip to main content

ஈழ பிரச்சனையில் திமுக கொள்கை முடிவை செயல்படுத்த வேண்டும்...! - மே 17 இயக்கம் கோரிக்கை.! 

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

DMK on Eelam issue Policy decision must be implemented ...! -May 17 Movement Request.!

 

சட்டமன்றத்தில் ஈழப்பிரச்சனை பற்றிய ஆளுநர் உரையில் மாற்றம் வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வைத்துள்ள விரிவான கோரிக்கையில், “ஜூன் 21 தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடகா மேகதாதுவில் கட்டப்போகும் அணையைத் தடுக்கும் முயற்சி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான தன்னாட்சி பாதுகாப்பு, அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசுப் பணியிடங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை, ஈழத்தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை ஆகிய ஒன்றிய அரசை வலியுறுத்தும் அறிவிப்புகள், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, 69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முற்போக்கு முயற்சிகளை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.

 

அதே நேரத்தில், ஆளுநரின் இந்த உரையில், தமிழீழத் தமிழர்கள் குறித்த 15ஆம் குறிப்பு சொல்கின்ற ‘ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிசெய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும்’ எனும் முடிவானது, 08-06-2011 சட்டமன்ற தீர்மானம், 27-03-2013 சட்டமன்ற தீர்மானம் ஆகியவற்றிற்கு மாறானதாகவும், புறம்பானதாகவும் அமைந்துள்ளது.

 

மேலும் இந்த முடிவானது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2019 தேர்தல் அறிக்கை 17ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இருமுறை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அண்மைக் காலத்தில் ஏற்கப்பட்டன. எனவே, ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் அனைத்தின்மீதும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்திட ஐ.நா. அமைப்புகளும், உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள, கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்’

 

‘இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழீழப் பிரச்சனைக்கு எவ்வித நிலையான அரசியல் தீர்வுகளை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஐ.நா.வின் நேரடி கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்த, இந்திய அரசை திமுக வலியுறுத்தும்’

 

மற்றும் 2021-ஆண்டு 16வது  சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர் நல்வாழ்வு’ தலைப்பின் கீழ் 13வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள, ‘இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்’

 

14வது வாக்குறுதியான, “இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்’

 

என குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் ‘இலங்கை அரசு, ஒருபோதும் நிறைவேற்றவே, செய்திடாத அதிகார பங்கீடு’ பற்றி மட்டுமே ஒன்றிய அரசை வலியுறுத்தும் நிலைப்பாடானது ஆளுநர் உரையினூடாக வெளிப்படுகிறது. இந்த நிலைப்பாடு உங்களது வாக்குறுதியின் கருப்பொருளான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலை குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை  வெளிப்படுத்துவதாக அமையவில்லை. இந்தக் கோரிக்கைகள் உள்ளடக்கப்படும் வகையில் மாற்றியமைக்கபட வேண்டுமென்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மேலும், தமிழீழத் தமிழர்கள் அதிகாரப்பகிர்விற்காக போராடவில்லை. மாறாக, தமிழீழ தேசத்திற்காகவே போராடினார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகால திமுகவின் மாநாடுகளின் தீர்மானங்களே வெளிப்படுத்தி இருக்கின்றன. மற்றும் திமுகவின் ஒப்புதலோடு ஏகமனதாக கடந்த 2011 மற்றும் 2013 காலங்களில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பு’, ’இலங்கை அரசின் மீது சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை’, ’இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை’ என இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

 

எனவே, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழீழத் தமிழர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் (மேற்சொன்ன) நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய அரசின் கொள்கை மாற்றத்தினை சாத்தியமாக்கிட வேண்டும். நீண்ட அநீதிக்குள்ளான ஈழத்தமிழர்கள், இன்றளவும் இனப்படுகொலைக்கு உள்ளாகிறார்கள். இதைப் புலப்படுத்தும் வகையில் 21-06-2021இல் மட்டக்களப்பில் தமிழீழ இளைஞர் சிங்கள இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. இது சமயம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கை அரசிற்கு அளித்து வந்த GSP+ (Generalised Scheme of Preferences) எனும் சலுகைகளை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுத்திருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் துன்புறுத்துவது தொடர்பாகவும், மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும் தமிழர்களுக்கு நேரடியாக தொடர்பற்ற ஐரோப்பிய ஒன்றியமே இம்முடிவினை துணிந்து மேற்கொள்ளும் காலகட்டத்தில் தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடும் இலங்கை அரசின் மீது நேர்மையான சமரசமற்ற முடிவுகளை இந்திய அளவில் கொண்டுவர போராட வேண்டும். இந்நிலை சாத்தியமாகவில்லையெனில், ஆளுநர் உரையின் 34வது குறிப்பான தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பு, வாழ்வுரிமை, கைது செய்யப்படுதல், கச்சத்தீவு மீட்பு ஆகியவை கானல் நீராகும் என்பதை கடந்தகால வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டின் முடிவுகள் முக்கியமானவையாகின்றன. வங்கதேசத்தின் மீதான வெளியுறவுக் கொள்கையில் மேற்கு வங்க மக்கள் ஆளுமை செலுத்துவதற்கு இணையாக தமிழ்நாடும் இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை உறுதியாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. மேற்கு வங்க மாநில மக்களின் பங்களிப்பினால் தங்களுக்கென தனிநாடு உருவாக்கிக் கொண்ட வங்கதேசம், இவ்வருடத்தில் 50ஆம் ஆண்டு விடுதலை தினத்தை கொண்டாடுகிறது. தமிழ்நாடும் இவ்வாறாகவே தமிழீழம் குறித்த நிலைப்பாட்டின் மூலமாக, சனநாயகரீதியில் வலிமையான மாநிலமாக இக்காலகட்டத்தில் மாற வேண்டுமென விரும்புகிறோம்.

 

எனவே, இந்நிலைப்பாடு தொடர்பாக உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு அரசும் தனது முடிவுகளை ஏற்கனவே மேற்கொண்ட கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே 17 இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்" என கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...