ADVERTISEMENT

''வரலாற்றைத் திசை திருப்புவதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது''- பாஜக அண்ணாமலை

04:40 PM Oct 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30/10/2021) வெளியிட்ட அறிவிப்பில், "1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிரத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1968ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து, தாய் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும். ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் என அதிமுக அரசு அறிவித்ததை மாற்ற நினைப்பது அழகல்ல. வரலாற்றைத் திசை திருப்புவதே திமுகவின் நோக்கமாக இருந்து வருகிறது. மக்களுக்கு எதிரான முரண்பாட்டுக் கருத்துக்களையே தனது கொள்கை என்பதை திமுக எடுத்துக்காட்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT