Skip to main content

தி.மு.க. இளைஞரணி மாநாடு இன்று துவக்கம்!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
DMK Youth conference starts today!

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சி நேற்று நடைபெற்றது. இதனை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த மாநாடு, திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி கொடியேற்றி துவக்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு வரவேற்புக் குழு தலைவர் ஜோயல் வரவேற்றுப் பேசுகிறார். காலை 9.45 மணிக்கு மாநாட்டுத் தலைவர் முன்மொழிதல், வழிமொழிதல் ஆகியவை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி மாநாட்டுத் தீர்மானங்கள் முன்மொழிவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படும். 

காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 22 தலைப்புகளில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். மாலை 6 மணிக்கு மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து கனிமொழி எம்.பி. உரையாற்றுகிறார். பிறகு 6.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரும், அமைச்சருமான உதயநிதி உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். 

சார்ந்த செய்திகள்