திமுக மாவட்ட செயலாளருக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஒன்றிய செயலாளர்கள்!

DMK Union secretaries held a consultative meeting against the dt secretary

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளருக்கு எதிராக அதே கட்சிக்குள் தனி அணிகள் ரகசியமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மாநகரத்தில் மாநகரப் பொறுப்பாளருக்கு எதிரான அணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதெல்லாம் கட்சித் தலைமை வரை சென்றும் நடவடிக்கை இல்லை என்ற ஆதங்கங்கள் கட்சி நிர்வாகிகளிடம் உள்ளது. இந்த நிலையில் தான் இன்று (10.06.2025) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனுக்கு எதிராக ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் விராலிமலை ஒன்றிய செயலாளர்கள் சத்தியசீலன், ஐயப்பன், இளங்குமரன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, குண்றாண்டார்கோயில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, வெங்கடாசலம் (3பேரில் 2 பேர் வருகை), கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர்களில் பரமசிவம், தமிழய்யா, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், புதுக்கோட்டை ராமகிருஷ்ணன் ஆகிய 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் உள்ள 3 ஒன்றிய செயலாளர்களில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் கூட்டத்திற்கு வருவதாகக் கூறியவர் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை.

மற்றொரு ஒன்றிய செயலாளரான சாமிநாதன் ஊரில் இல்லை என்பதால் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள ஒரு ஒன்றிய செயலாளர் சண்முகம் மட்டும் வர விரும்பவில்லை. ஆளும் திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். அரசு ஒப்பந்தங்களையும் அவர் விரும்பியவருக்கே கொடுக்கிறார். அதே போல மேலும் உள்ள கட்சி பொறுப்பாளர்களை ஒன்றிய செயலாளர்களிடம் கேட்காமல் அவருக்கு வேண்டிய நபர்களுக்கே பொறுப்புகளைக் கொடுத்து கட்சிக்குள் புதிய தனி அணியை உருவாக்குகிறார்.

மேலும் அங்கன்வாடி உள்ளிட்ட பணிகளுக்குக் கட்சிக்காரர்களிடம் கேட்காமலும் தகுதியானவர்கள் இல்லாதவர்களுக்குப் பணி வழங்கக் கூறியுள்ளார். இதனால் வரும் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும். இவரது இந்த செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனைச் சந்தித்து கோரிக்கை வைப்பது அப்படியும் மாறவில்லை என்றால் கட்சித் தலைவரையும் துணை முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாளை (11.06.2025) மாவட்டச் செயலாளரைச்சந்திக்கத் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒட்டு மொத்த ஒன்றிய செயலாளர்களும் ஒன்றாகப் போர்க்கொடி தூக்கி ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பது புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

District Secretary pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe