Skip to main content

“50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும்!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

DMK Udhayanithi stalin


தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அவர், ஆண்டிபட்டி, பிச்சம்பட்டி, மொட்டனூத்து, மரிக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், “ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மகாராஜனை 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அது போதாது, வருகின்ற பொதுத் தேர்தலில் தலைமை அறிவிக்கும் திமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும். கடந்த முறை நடந்த எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. 38 இடங்களில் வெற்றிபெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவானது. ஆனால், தேனி பாராளுமன்றத் தொகுதி மக்கள்தான் ஏமாற்றிவிட்டீர்கள். 

 

திமுக மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் மோடி கோபத்தில் உள்ளார். ஏனென்றால் இந்தியாவிலேயே மோடி அலை வீசிய எல்லா மாநிலங்களும் அவருக்கு ஆதரவாக இருந்தபோதே, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு ரூ.15,000 கோடி திருப்பித் தர வேண்டியுள்ளது. ஆனால், அதைத் தர மறுக்கிறார். மழை வெள்ள நிவாரணமாக ரூ.10,000 கோடி கேட்டோம். அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால், புதிதாகக் கட்டப்படும் பாராளுமன்ற வளாகத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியைச் செலவுசெய்கிறார். 

 

கரோனா காலத்தில் தன் சொகுசுக்காக இரண்டு விமானங்கள் வாங்கியதில் ரூ.7 ஆயிரம் கோடியைச் செலவு செய்துள்ளார். இது எல்லாம் உங்களுடைய வரிப்பணம். திமுக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை, 400 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 40 ரூபாயாக இருந்தது. தற்போது 90 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 220 ரூபாயாக உயர்ந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வை தமிழ்நாட்டில் திணித்துள்ளார்கள். எல்லோரும் வேண்டாம் என்று சொன்னபிறகும், நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளார்கள். இதனால், இதுவரையிலும் 14 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 

பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்ஸும் யார் சிறந்த அடிமை என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீக்கடை நடத்திவந்த துணை முதல்வருக்கு இத்தனை கோடி சொத்துகள் எப்படி வந்தது. சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து வெளியேறிய உடன், அவர் நுழைந்துவிடுவார் என்பதற்காக ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தையும், கட்சி அலுவலகத்துக்கும் சீல் வைத்துவிட்டார்கள். 

 

அமைச்சர் ஒருவர் பேசும்போது மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்கூட இந்த அளவுக்குச் சிறந்த நினைவு மண்டபத்தைக் கட்டி இருக்கமாட்டார்கள் என்று கோமாளித்தனமாகப் பேசுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி, ‘மோடிதான் எங்கள் டாடி’ என்று கூறினார். ஆனால், 'ஜெயலலிதாவோ மோடியா இந்த லேடியா?' என்று கேட்டார். மிகச் சிறந்த தொழில்நுட்பம் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா, எப்படி இறந்தார் என்று மூன்று வருட காலமாகியும் இதுவரை எதுவும் தெரியவில்லை. 85 நாட்களாக சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று முதலில் கூறியவரே ஓபிஎஸ் தான். அப்படி இருக்கும்போது விசாரணை கமிஷன் 10 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறைகூட அதற்குச் சென்று ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை.

 

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும். அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில், ஆண்டிப்பட்டி பகுதியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆண்டிப்பட்டி ஒன்றியப் பகுதிகளுக்கான தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றுவோம். ஆண்டிபட்டி பகுதிக்குப் புறவழிச் சாலை திட்டத்தைக் கொண்டுவருவோம். ஸ்டாலின் கூறியதுபோல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களுக்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் தீர்த்துவைப்போம்” என்று பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்