Advertisment

“உண்மை அம்பலமாகிவிட்டதால் அண்ணாமலை அலறுகிறார்” - ஆர்.எஸ் பாரதி காட்டம்

dmk rs bharathi talk about bjp annamalai

“இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி.அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித்திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல” என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற தமிழ்நாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, வெறுப்பரசியல் நடத்தும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாள்தோறும் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றலாம் என மனப்பால் குடித்து வருகிறார்கள். கழகத் தலைவர், முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று, "இந்தியாவுக்கு நம் கழகத்தலைவர் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும்" என்றும், "இந்தியாவை வழிநடத்தும் தலைமைத் தகுதி நம் கழகத் தலைவருக்கு இருக்கிறது" என்றும் உளமாரப் பாராட்டியதால் பா.ஜ.க.வினருக்கு அங்கமெல்லாம் எரியத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருடைய பெருமைமிகு சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம். பா.ஜ.க. பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

Advertisment

அதில் வழக்கம் போல திசைதிருப்பும் வேலையைக் காட்டியிருக்கிறார், பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை. திராவிட முன்னேற்றக் கழகம் இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைக்கிறார். தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல. எங்கள் அன்னைத் தமிழ்நாட்டவர் மீது ஆதிக்க இந்தியைத் திணிக்காதே என்று எந்நாளும் உரிமைக்குரல் கொடுக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. அதற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு உயிர்க்கொடை ஈந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம்.

இந்தித் திணிப்புக்கு எதிரான தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல. சாதிப்பிரிவினை அரசியலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்கள், சிறுபான்மை மக்களைப் பார்த்து 'பாகிஸ்தானுக்குப் போ" என பா.ஜ.க. நிர்வாகிகள் வெறுப்புணர்வுப் பிரசாரம், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியான வன்முறை-வெறுப்பரசியலை நடத்தி, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருப்பவர்கள் தேசபக்தி வேடம் போடும் அண்ணாமலையின் கட்சியினர்தான்.

வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, "வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்பது வெட்கக் கேடு. ஆனால், பீகார் மாநில அரசின் சார்பில் வந்த குழுவினர், தமிழ்நாட்டில் எவ்வித அச்சமான சூழலும் இல்லை என்பதையும், வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, உண்மை நிலையைத் தெளிவான அறிக்கையாக அளித்துள்ளனர்.

உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்போம் எனத் தெரிவித்த அண்ணாமலை, அந்த அறிக்கையில் உள்ள மையின் ஈரம் காய்வதற்குள், வன்ம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைத்தான் தோலுரித்துக் காட்டி உள்ளது. அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe