Skip to main content

“ஈ.டி.யின் அக்கப்போர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு முடிவு கட்டியிருக்கிறது” - ஆர்.எஸ். பாரதி பேட்டி!

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

dmk RS Bharathi says Supreme Court has put an end to the ED scheming

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று (22.05.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, “தனி நபர்கள் செய்த விதிமுறை மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?. அமலாக்கத்துறை வரம்பு மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் நீங்கள் (அமலாக்கத்துறை) எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “இந்தியா அடிப்படையில் ஒரு கூட்டாட்சி நாடு ஆகும். அந்த அமைப்பிற்கு எதிராக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. வரம்புகள் அனைத்தையுமே மீறி அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

அதோடு அமலாக்கத்துறைக்குக் கடுமையான கண்டனத்தையும் அவர் தெரிவித்தார். இறுதியாக நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “அமலாக்கத்துறை என்பது பிரதமர் மோடி மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க. அல்லாத மாநிலத்தில் யார்? யார்? ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் மீதெல்லாம் வழக்குப் போட வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021இல் இருந்து தொடர்ந்து மக்கள் மத்தியிலே செல்வாக்கோடும் நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எப்படியாவது இந்த அரசுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும், இன்னும் தேர்தலுக்கு 7, 8 மாதம் இருக்கிற காரணத்தினால் அமலாக்கத்துறையின் மூலமாகத் தமிழகத்திலே தொடர்ந்து பல காலமாக டாஸ்மாக்கில் நிலுவையில்  பல வழக்குகள்  இருந்ததையும் மறந்துவிட்டு தி.மு.க.வின் மீது பழி சுமத்துகிற வகையில் பத்திரிகையிலே செய்தி வருவதும், பா.ஜ.க.வினுடைய தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதும் தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஒரு சம்மட்டி அடி கொடுப்பதைப் போல இன்றைக்கு  உச்சநீதிமன்றம் இதற்குத் தடை விதித்திருப்பது தமிழக மக்களுடைய உணர்வுகளை மதித்து மட்டுமல்ல அமலாக்கத்துறையினுடைய அக்கப்போர்களுக்கு ஒரு முடிவும் கட்டி இருக்கிறது. இந்த தீர்ப்பை தி.மு.க. வரவேற்கின்றது.

dmk RS Bharathi says Supreme Court has put an end to the ED scheming

நாங்கள் (தி.மு.க.) எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நியாயமானது நேர்மையானது என்பது அதற்கு ஒரு அங்கீகாரத்தை உச்சநீதிமன்றமே கொடுத்துவிட்ட பிறகு வேறு ஒரு அங்கீகாரமே தேவையில்லை. மொத்த தீர்ப்பையும் நான் பார்க்கவில்லை. கடுமையான கண்டனம் கூட தெரிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆகவே இதற்குப் பிறகாவது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதன் அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எல்லாம் பார்க்கலாம். கேரளாவில் 2 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியுள்ளார். அதாவது பிளாக்மெயில் பண்ற ஒரு நிறுவனமாக அமலாக்கத்துறை ஆகிவிட்டது. தமிழ்நாட்டிலேயே டாக்டரிடம் லஞ்சம் கேட்டு அந்த அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டதெல்லாம் இருக்கிறது. அமலாக்கத்துறை என்பது பிளாக்மெய்லிங் ஆர்கனைசேஷன் மாதிரி இந்தியா முழுவதும் செயல்படுவதாகத்தான் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்