
திமுகவினரின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வருகிறது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், "அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான ஆ.ராசாவின் பேச்சு, தனிப்பட்ட விமர்சனமாக முன்னெடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலானது. அது திமுகவுக்கும், ஆ.ராசாவுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியது. ஏற்கனவே லியோனியின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களும் இதேபோல சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி" என்று பதிவு செய்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 26, 2021
இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.