தி.மு.க.வில் உள்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் இருக்கும் வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் கழகத் தேர்தல் நடக்கும் என்று, தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தி.மு.க. உடன்பிறப்புகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட பகுதிச் செயலாளர்கள், இங்கு மட்டும் 200 வார்டுகள் இருக்கின்றன. அமைப்பு ரீதியாக தி.மு.க.வில் ஒரு வார்டுக்கு 2 என 400 வட்டச் செயலாளர்கள் இருக்காங்க. இந்த நிலையில், 200 வார்டுகளின் அடிப்படையில் கழகத் தேர்தல் நடக்கும்னு அறிவிக்கப்பட்டிருப்பதால், மீதம் இருக்கும் 200 வட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகும். அதோடு அவர்களோடு, செயல்பட்ட நிர்வாகிகளும் பதவி இழப்பாங்கன்னு ஆதங்கப்படறாங்க” என்றார்கள்.
இதுமட்டுமின்றி திமுக தனது மா.செக்களின் எண்ணிக்கையையும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது, தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 77 மா.செ.க்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையையும் அறிவாலயம் குறைக்கப்போவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதோடு, இளைஞர் அணிக்கு ஒத்துழைக்கும் வகையில் 50 வயதுக்குட்பட்ட நபர்களாகப் பார்த்து புதிய மா.செ.க்களாக நியமிக்கப்போவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் உட்கட்சிப் பதவிகளை மையமாக வைத்து இப்போதே பண விளையாட்டும் தொடங்கிவிட்டதாம். இது தொடர்பாக இப்போதே அறிவாலயத்தில் புகார்கள் குவியத் தொடங்கிவிட்டது. இருந்தும் அதனை ஆராய்ந்து தவறு செய்துள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எதுவும் இல்லைன்னு பலரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த உட்கட்சித் தேர்தலில் மாநகராட்சிப் பகுதிகளில் பதவியை இழக்க இருக்கும் நிர்வாகிகள், எங்கள் எதிர்காலமே அவ்வளவுதானா? என்று இன்னொரு பக்கம் கதிகலங்கிப் புலம்புகிறார்கள்.