Advertisment

“பாவம், இதுல அவர் வளர்க்கும் ஆடுகள் வேற...” - அண்ணாமலையை கிண்டல் செய்த திமுக எம்.பி

DMK MP senthilkumar tweet about bjp leader annamalai

Advertisment

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இது அவர்களுக்கு இடையே ட்விட்டரில் வார்த்தை போராக மாறியது. அதில் செந்தில் பாலாஜி, குற்றச்சாட்டிற்கு ஆதாரம் கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பிஜிஆர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்குத்தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளைச் செய்துள்ளதாக சில ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சந்திக்கத் தயார்” எனத் தெரிவித்திருந்தார்.

DMK MP senthilkumar tweet about bjp leader annamalai

Advertisment

அதே போல், பாஜக சார்பில்கோவில்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி கோவை இஸ்கான் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை ஆகியவற்றை பற்றியெல்லாம் பேசினார். மேலும் அதே பேட்டியில், “பிஜேபியை எவ்வாறு ஹேண்டில் செய்ய வேண்டும் எனத்தெரியும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். தொட்டுப் பார்க்கட்டும். 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம். மோடிஜி டெல்லியில் இருக்காரு. தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம். தொட்டுப் பார்க்கட்டும். திமுக, பாஜக மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். இப்போதாவது தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிஜிஆர் நிறுவனம், அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதற்குப் பதிலளித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒண்ணுமே புரியல; இப்போ தான் மேல கைய வைச்சு பாரு வட்டியும் முதலும்மா திருப்பி கொடுப்போம் என்று சொல்லிட்டு வழக்கு போட போறாங்க என்றதும் சாதாரண விவசாயியா மாறிடறாங்க. பாவம் இதுல அவர் வளர்க்கும் ஆடுகள் வேற ஏன் சமந்தம் இல்லாம உள்ளே இழுத்து விடுறாங்க”என்று பதிவிட்டுள்ளார்.

Annamalai senthilbalaji senthilkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe