/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai high court 600_14.jpg)
சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கில்,திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வாதத்தையே தன் வாதமாக ஏற்றுக்கொள்ளுமாறு, சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததையடுத்து, அவர்களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி,உரிமை மீறல் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தடையை நீக்கக்கோரி தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்தது. இந்த அனைத்து வழக்குகளும்தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திஅமர்வில் கடந்த 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்டன.
அப்போது தி. மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. சட்டசபையில் குட்கா கொண்டு வந்ததற்காக, உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியது தொடர்பான வழக்கில், தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களின்வாதங்களையே தன் தரப்புவாதமாக எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாலும், விசாரணை நடைபெற்ற மூன்று நாட்களும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததாலும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகதெரிவித்த நீதிபதிகள், தி.மு.க தரப்பு வாதத்தையே கு.க. செல்வம் தரப்பு வாதமாக பதிவு செய்துகொள்ளக்கோரி மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Follow Us