DMK MLA defeats alliance candidate

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் பல இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

DMK MLA defeats alliance candidate

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டில் திமுக கூட்டணிக் கட்சியான விசிக சார்பில் புஷ்பா(65) என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவில் சீட் கிடைக்காமல் வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்டார் எல்.பெரியநாயகம். இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேச்சையாக நின்ற பெரியநாயகம் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுகவிலிருந்து வெளியேறி சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று, திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது, திமுக எம்.எல்.ஏ. மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி விசிகவினர் பேசிக்கொள்கின்றனர்.

DMK MLA defeats alliance candidate

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், ”திமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் முறையாகப் பணி செய்து வெற்றியை பெற்றுதர வேண்டும்” என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்குத் அறிவிறுத்தினார். ஆனால், தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டதும், அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் நோட்டீஸ்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர வேண்டும் என்று பதிவிட்டு வாக்கு சேகரித்தார்.

இதுகுறித்து திமுக தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் நேரடியாக வந்து எஸ்.ஆர்.ராஜா உள்பட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இப்போதுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளைப் பாருங்கள். போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கட்சி எதிர்காலத்தில் நல்ல வழிகளைக் காட்டும் என அறிவுறுத்திச் சென்றார்.

”சுயேச்சையாகப் போட்டியிட்ட பெரியநாயகமும் திமுகவிலிருந்து தேர்தலுக்கு முன்பு விலக்கப்பட்டார். இருந்தும் அவர் இன்று வெற்றி பெற்றுள்ளார். பெரியநாயகம் வெற்றி பெற மறைமுகமாக எஸ்.ஆர். ராஜா உதவியுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. பிரச்சாரத்தின் போது பெரிய நாயகத்திற்கான அனைத்து செலவுகளையும் எஸ்.ஆர். ராஜா ஏற்றுக்கொண்டதாகவும் அப்போதே பேச்சுகள் எழுந்தன. இன்று வெற்றி பெற்றதும் எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றது அதனை உறுதி செய்துள்ளார் என்பதுபோலவே எண்ணத்தோன்றுகிறது” என்கின்றனர் அப்பகுதி விசிகவினர்.