Advertisment

"தி.மு.க ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இருக்கும்"- மு.க.ஸ்டாலின் பேச்சு!  

dmk mkstalin speech at cuddalore district election campaign

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம், விருத்தாசலம்- பொன்னேரி பைபாஸ் சாலை அருகே கலைஞர் திடலில் அமைக்கப்பட்டிருந்தப் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது; "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர்தான், இந்த ஊர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் அவர். வாடிய முகங்களின் ஏக்கங்களை போக்குவதற்காகவும், உங்களுடைய கவலைகளைத் தீர்ப்பதற்காகவும் தான் நான் வந்திருக்கிறேன். தி.மு.க. ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை ஏற்படுத்தக் கூடியவை எவை எவை என்பதை எல்லாம் யோசித்து, அதை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்.

Advertisment

இன்று ஒரு ஆட்சி உள்ளது. மக்களின் துரோக ஆட்சி, மக்களைத் தண்டிக்கும் ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் தண்டிக்க வேண்டும். அதற்கான காலமும், சூழலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு உழைக்க கஷ்டம் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அவர் உழைப்பு என்று எதை சொல்கிறார். ஊர்ந்து போவதையா... ஊர்ந்து போன கதை எல்லாம் உங்களுக்கு தெரியும். அதைதான் உழைப்பு என்று கூறுகிறாரா? அப்படி ஒரு பழக்கம் எங்களுக்கு இல்லை. காலைப் பார்த்தால் ஊர்ந்து போய் பதவியைப் பிடிப்பதும், அதன் பின்பு காலை வாரிவிட்டு பதவி சுகத்தை அனுபவிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

கலைஞர் எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார்; போராடக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைச் செல்ல கற்றுக் கொடுத்தார், மக்கள் பாதிக்கப்படும் போது உதவிட கற்றுக் கொடுத்தார். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மக்களில் ஒருவனாக இருக்க கற்றுக் கொடுத்தார். புயலா, மழையா, நிலச்சரிவா, வெள்ள பாதிப்பா, எங்கே மக்கள் துயர் துன்பத்தை அனுபவித்தாலும், இந்த ஸ்டாலின் முதல் ஆளாக அங்கு நிற்பேன்.

தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கிச் சூட்டில் பலியாக்கிய போதும், நீட் தேர்வு காரணமாக மாணவ மணிகள் தற்கொலை செய்துக் கொண்ட போதும் சென்றேன். அ.தி.மு.க பேனர் விழுந்ததில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று உதவிகள் செய்தேன். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினேன். நீட் தேர்வுக்கு எதிராக போராடி இருக்கிறேன். காவிரி உரிமை மீட்பு நடைபயணம் நடத்தினேன். இது அனைத்திற்கும் மேலாக கரோனாவின் போதுமக்களோடு மக்களாக இருந்து உதவி செய்தவன் தான் இந்த ஸ்டாலின். எனக்கு உழைப்பைப் பற்றி பழனிசாமி கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் நான் இல்லை. கரோனா காலத்தில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறோம் என விளம்பரம் கொடுக்கிறீர்களே... தமிழ்நாட்டில் கரோனாவினால் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுதான் கோபுரமாக உயர்ந்து நிற்பதா? கரோனா காலத்தில் கொள்ளையடித்து கோபுரமாக நின்றது முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர்கள்தான், பொதுமக்கள் அல்ல. பொது மக்களின் வாழ்க்கை தரைமட்டத்திற்கு வந்துவிட்டது. சிறுதொழில் செய்பவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். பல பேருக்கு வேலை இல்லை. சிறுதொழில்கள் முடங்கிப் போய்விட்டது; தொழிலை தொடங்க முடியவில்லை.

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு மாதம் ஐயாயிரம் கொடுங்கள் என்று நான் சொன்னேன். காதில் கேட்காதது போல் முதலமைச்சர் இருந்தார், பணம் இல்லை என்று சொன்னார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கான்ட்ராக்ட்காரர்களுக்கு கொட்டிக் கொடுத்தார். கரோனா காலத்திலும் டெண்டர் முறையில் வேலை செய்தார்கள். மருந்தில் தொடங்கி பிளிச்சிங் பவுடர் வரை கொள்ளை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதிலும் ஊழல். இப்படி கரோனாவை விட கொடூர அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்தை முடித்தாக வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. அதன்பிறகு அமையப் போகிற தி.மு.க ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இருக்கும். கலைஞரின் மகனான இந்த ஸ்டாலின் சொன்னதை செய்வேன், செய்வதை தான் சொல்வேன். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும்" என்றார்.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்,நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

tn assembly election Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe