Advertisment

“அரசியலில் யார் தான் புனிதர்...” - அமைச்சர் கே.என். நேரு

DMK Meeting ministers nehru and anbil mahesh participated

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டம், பொன்மலை பகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி மற்றும் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Advertisment

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; “ஒவ்வொரு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பணியில் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு; மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணபொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் நம் பக்கம் தான் என்பதை நிரூபிப்போம்” என்று பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “ஓர் ஆண்டில், நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை. அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும். கே.என். நேரு புனிதரா என கேட்கிறார்கள். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள். ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்துள்ளோம். தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்தது மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 850 கோடியில் புதிய பேருந்து முனையம், மார்கெட் 120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம். எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்” என்று பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, “மாநில சுயாட்சி இருந்தால் தான் சமூக நீதியை முழுமையாக அடைய முடியும். இன்னும் மாநில சுயாட்சிக்காக போராடி வருகிறோம். மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாக பெற முடியும். மத்திய அரசை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவராக ஸ்டாலின் இருக்கிறார்” என்று பேசினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe