DMK-Marxist communist party talks smooth over seat sharing

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

Advertisment

இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை நடத்தியது. சென்னை அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பி.சம்பத், பெ.சண்முகம், க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகிய 4 பேர் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், “தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. எங்களது முடிவை கூட்டணி தலைமையிடம் கூறியுள்ளோம். முதல்வர் ஸ்பெயினில் இருந்து திரும்பி வந்தவுடன் தொகுதி குறித்த உடன்பாடு ஏற்படும் என்று நம்பிக்கையுள்ளது” என்றனர்.