Skip to main content

என்னை கேட்காம எப்படி உதவி செய்யலாம்... எப்ப தேர்தல் வந்தாலும் எனக்கு சீட் வேணும்... தி.மு.க.-வில் நடக்கும் உட்கட்சி அரசியல்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

dmk

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது இப்போது வரை சந்தேகமாக இருந்தாலும், அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்கள் ஓயவில்லை.

 

வேலூர் மாவட்ட தி.மு.க.வை சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு, மத்திய, மேற்கு என பிரித்த போது, மேற்கு மா.செவாக தேவராஜ் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு தலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வி நியமனம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டு தங்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார் என பலரும் முட்டிமோதினர். துரைமுருகனின் சிபாரிசு மீண்டும் தேவராஜ் பக்கமே இருந்தது. தேவராஜை மீண்டும் நியமிக்கக்கூடாது என பல நிர்வாகிகளும் தலைமைக்கு மனு அனுப்பினர். அந்த மனுக்களை ஒதுக்கிவிட்டு சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று கேட்டால், கட்சிக்குள் உள்ளடி கரோனா புகுந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.


கட்சி ரீதியாக வேலூர் மேற்கு மாவட்டம் எனச் சொல்லப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கான சீட்டை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, தி.மு.க. ந.செ ராஜேந்திரன், மாணவரணி மோகன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டையை வாங்கிட கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து உட்கட்சி சதியால் தோல்வியைச் சந்தித்த கவிதா முயற்சி செய்யகிறார். வாணியம்பாடி தொகுதியை வாங்கிவிட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முயற்சி செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் உள்ளார்.

 

மற்ற தொகுதிகளைவிட ஆம்பூர் தொகுதியைக் குறிவைத்துத்தான் போட்டி பலமாக உள்ளது. அந்தத் தொகுதியை முதலில் அணைக்கட்டு எம்.எல்.ஏவாக உள்ள மத்திய மா.செ நந்தகுமார் பணிகளைத் தொடங்கினார். மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் ஆம்பூர் சென்றதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போதே பேரணாம்பட்டு ஒ.செ. வில்வநாதன், மாதனூர் ஒ.செ சுரேஷ்குமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் மாவட்ட பொருளாளராகவுள்ள அண்ணா.அருணகிரி போன்றவர்கள் மோதினார்கள். ஆனால் வில்வநாதன் ஜெயிச்சிட்டார். 2021 தேர்தலில் இந்த ஆம்பூரை வாங்கிவிட அண்ணா.அருணகிரி, சுரேஷ்குமார், தொழிலதிபர் சரவணன் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காக தொகுதியில் கரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்குறாங்க. இதில் தொகுதி எம்.எல்.ஏவான வில்வநாதனை அழைக்காமலே அவர் ஒ.செ.வாக உள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குள் அண்ணா.அருணகிரி போய், கரோனா நலத்திட்ட உதவிகள் தந்தார். அதேபோல் ஆம்பூர் தொகுதிக்குள் வரும் மாதனூர் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ.-வைப் புறக்கணிப்பது போல் செயல்படுகிறார் சுரேஷ்குமார். இதுதான் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் வெடிச்சது.

 

dmk

 

கடந்த மே மாத இறுதியில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "என்னை கேட்காமல் என் ஒன்றியத்தில் எப்படி மாவட்ட பொருளாளர் வந்து உதவி செய்யலாம்'' எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், "என் ஒன்றியத்தில் நான் உதவிகள் செய்துகிட்டு இருக்கும்போது சம்மந்தமேயில்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு நிர்வாகிகள் வந்து, என்னிடம் தகவல் சொல்லாம, என் ஒன்றியத்தில் உள்ள அணி அமைப்பாளர்களை வைத்து எப்படி உதவி செய்யலாம்'' என மாவட்ட பொறுப்பாளரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதனால் மாவட்ட கமிட்டி கூட்டம் காரசாரமானது, இதுப்பற்றி தலைமைக்கும் புகார் போய்வுள்ளது என்றார்கள்.

 

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, "என் ஒன்றியத்திற்குச் சம்மந்தமேயில்லாத கட்சி நிர்வாகிகள் வந்து என்னிடம் கூட சொல்லாமல் உதவி செய்ததைத்தான் கேள்வி எழுப்பினேன், கட்சிக்கென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனால் கேள்வியாக எழுப்பினேன்'' என்றார். மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகிரியிடம் நாம் கேட்டபோது, "மாவட்ட கமிட்டி கூட்டம் என்பது எங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விவகாரம் அதுப்பற்றி நான் வெளியே பேச விரும்பவில்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு, உள்ளடி வேலை பார்த்ததால் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதில் கோட்டைவிட்டது என்கிறார்கள் கட்சியின் விசுவாசிகள். இப்போதே கோஷ்டி சண்டையைத் துவங்கிவிட்டார்கள், தலைமை தலையிடவில்லையென்றால் கடந்த தேர்தலைப் போல் வரும் தேர்தல் எப்போது நடந்தாலும், கட்சியின் வெற்றியை உள்ளடிகள் காலை வாரிவிடும் என்பதே கள நிலவரம்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திமுக கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்; இரவில் நடந்த பயங்கரம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 youth who tried to steal from the DMK councilor house was arrested and handed over police

ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி நகர், பி.பி.கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை, பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை அவரது வீட்டில் பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.

வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட ஜெகதீசன் இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் தகவல் தெரிவித்தார். அந்தப் பகுதி மக்கள் ஒன்று கூடி அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் வீட்டிலிருந்து ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அந்த நபரை ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த குமார் (33) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.