Advertisment

ஆட்சிக்கு வந்ததும் உங்களை விடமாட்டோம் - ஸ்டாலின் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன் இல்லத்திருமண விழா, சோளிங்கர் அடுத்த பிலாஞ்சியில் நடைபெற்றது. சீர்த்திருத்த திருமணமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். பிப்ரவரி 26ந்தேதி காலை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அவர் பேசும்போது, "மனிதனை மனிதன் மதிக்கவேண்டும், சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது, ஒருவரை சுயமரியாதையுடன் நடத்தவேண்டும் என்றே பெரியார் சொல்லி அதற்காக பேசி, எழுதி போராடிவந்தார். திமுக தொடங்கியது முதல் என்றுமே சுயமரியாதையை கைவிட்டதில்லை.

Advertisment

DMK leader Stalin warning to AIADMK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சுயமரியாதையுடன் சீர்திருத்த திருமணங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் உழைத்தனர். 1967ல் தி.மு.க ஆட்சி அமைந்து முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்று சட்டமன்றத்தில் நுழைந்த பின்பே, பெரியார் கண்ட கனவான இரு மொழிக் கொள்கையை சட்டமாக்கினார், மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு தமிழ்நாடு பெயர் சூட்டினார், சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்கிற சட்டங்களை நிறைவேற்றினார்.

Advertisment

தமிழகம் உருவாக்கி தந்த சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு இன்று தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி மத்தியில் ஆட்சி செய்யும் மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். மோடியும், எடப்பாடியும் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். மக்கள் குடியுரிமையைப் பெற்று வாழும் நிலையை ஏற்படுத்திவருகிறார்கள். தமிழகத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றன. பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றியபோது, இரண்டு அவையிலும் தி.மு.க எதிர்ப்புக் குரல் கொடுத்து ஓட்டுப்போட்டது. பா.ஜ.வுக்கு அடிமையாகவுள்ள அ.தி.மு.க-வும், பா.ம.கவும் தான் அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டது. இவர்களும் எதிர்த்திருந்தால் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது. இன்று இந்தியா முழுவதும் மக்கள் போராடும் நிலை வந்திருக்காது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நேரத்தில், தலைநகர் டெல்லியில் கலவரம் நடக்கிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. இந்து சமூதாய மக்களுக்கும்தான் ஆபத்து. இந்த சட்டத்தின்படி பதிவு செய்ய நாம் பிறந்த தேதி, அதற்கான பதிவு சான்றிதழ், பெற்றோர் பெயர், அவர்கள் எங்கே பிறந்தார்கள், எந்த தேதியில் பிறந்தார்கள், தாத்தா, பாட்டி யார் அதற்கான சான்றிதழை தர வேண்டும் என்கிறது. அப்படிச் சொல்லவில்லை என்றால் சந்தேகநபர் என்கிற பட்டியலில் நம்மை வைத்துவிடுவார்கள்.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குனர், ஆணையர் இருக்கிறார்கள். இவர்களின் வேலை, ஊழல் நடந்தால் முறையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கடைசியில் இருக்கிற அமைச்சரின் ஊழல் வரை விசாரிக்கவேண்டும். அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திரபாலாஜி மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வருடம் விசாரித்துவிட்டு வேலுமணி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர். இதேமாதிரிதான், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்கிறது. ஆனால், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிலும் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை சொல்கிறது.

வேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனச்சொன்ன அதிகாரிகளிடம், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீங்கள் முறையாக விசாரிக்கவில்லை. விசாரணை அறிக்கையை எங்களிடம் தராமல், அரசாங்கத்திடம் தந்தது ஏன் எனக்கேட்டு மரியாதையாகக் கோப்புகளைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் கொடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளனர்.

அதேபோல் மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ்தான் சொன்னார். முதலமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 40 நிமிடம் ஆவியுடன் பேசினார். பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்றார். அதையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மூன்று மாதத்தில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர். மூன்று ஆண்டுகளாகிறது, இதுவரை அறிக்கையைக் கொடுக்கவில்லை. மீண்டும் விசாரணை காலத்தை நீட்டித்துள்ளார்கள். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் வெளிவந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறையில்தான் இருக்க வேண்டும்.

இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. திமுக தான் ஆட்சியில் உட்காரும். உங்களை நாங்கள் விடமாட்டோம், ஜெயலலிதா மறைவில் உள்ள மர்மம் முதல் அமைச்சர்களின் ஊழல் வரை விசாரிக்க நடவடிக்கை எடுப்போம், அண்ணன் துரைமுருகன் உங்களை மன்னிக்கலாம், நான் மன்னிக்கமாட்டேன்" என தெரிவித்தார்.

ops edappadi pazhaniswamy stalin admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe