dmk

Advertisment

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் மக்களுக்குக் காணொலி வாயிலாக உரையாற்றினார். அதில், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்குக் கரோனா பரவியது குறித்த அரசின் எச்சரிக்கையைக் கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை. சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வியாபாரிகளிடம்கேட்டுக் கொண்டோம். சந்தையை மூடுவது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் பலமுறை பேச்சு நடத்தப்பட்டது. தற்காலிக சந்தையில் வியாபாரத்தை தொடங்க அதிகாரிகள் கூறினர். ஆனால் சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்குச் செல்ல வியாபாரிகள் விரும்பவில்லை. தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என அஞ்சி தற்காலிக சந்தைக்குச் செல்ல வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனர். பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர். விற்பனை பாதிக்கும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் இருந்தனர். எனவே அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு எனக் கூறினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப்பேரவையில் தி.மு.க. நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. ஆனால் அதிமுகவோ 'கரோனா தமிழ்நாட்டுக்கு வராது, வந்தாலும் ஆபத்தில்லை' என்றார்கள். நோய்த்தொற்று அதிகரித்து, உயிரிழப்புகளும் வளர்ந்து தொடரும் நிலையில், 'நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்'என்கிறார்கள்.

மேலும் 'கரோனா பரவாமல் செய்ய போதிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காமல் இருந்துவிட்டு, கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற வணிகர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதல்வர் வியாபாரிகள் மீது பழி சுமத்துகிறார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமே கரோனா பரவலுக்குக் காரணம்" எனக் குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கியதோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக எண்ணாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.