"நீங்கள் இந்தியரா?" என திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால் , அதிர்ச்சி அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனிமொழி.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா? என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் என பதிவு செய்துள்ளார் கனிமொழி எம்.பி. !
மேலும், இந்தி திணிப்பு என்ற ஹேஷ் டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள், அதில் பிரதான கட்சி திமுக. அதிலும் மறைந்த திமுக தலைவர் கலைஞர், தனது 14 வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். நாடாளுமன்றத்தில்38 இடங்களை வென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர். மும்மொழி கொள்கையையும் எதிர்த்து வருகிறது திமுக. இப்படிப்பட்ட சூழலில், கனிமொழியை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் , நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியிருப்பது, 'இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் ' என்று நினைக்க வைக்கிறது.
உடனே, கனிமொழியும் #HindiImposition என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பிரச்சனையை பதிவு செய்ய அவரது பதிவு வைரலாகியிருகிறது. கனிமொழியின் ட்வீட்டை கண்ட பலரும் மத்திய அரசையும், அந்த பாதுகாப்பு அதிகாரியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.