Skip to main content

“தமிழக ஆளுநரை திரும்பபெற ஜனாதிபதிக்கு கடிதம்” - திமுக அதிரடி

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

DMK has written letter President asking recall  Tamil Nadu Governor

 

பொதுவாக, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பொது மேடைகளில் தமிழக ஆளுநர் பேசும் அரசியல் மற்றும் ஏனையப் பொதுக்கருத்துக்கள்  பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 

 

அந்த வகையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக விழாவில் பேசிய தமிழக ஆளுநர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனைத் தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும், திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" எனப் பேசியிருந்தார். இது  பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

 

அதுமட்டுமில்லாமல், கடந்த வாரம் கோவையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கோவையில் நடந்தது திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். அதை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. பயங்கரவாதத்தை உருவாக்கும் இடமாக கோவை உள்ளது. கோவை தாக்குதலுக்குப் பின் பெரிய திட்டங்கள் இருந்துள்ளன. இந்த சம்பவத்தை உரிய நேரத்தில் என்.ஐ.ஏ.விடம் விசாரணைக்குக் கொடுத்திருக்க வேண்டும். பயங்கரவாதம் மூலம் மக்களை விரக்தி அடையச் செய்வதே அவர்களின் நோக்கம். தமிழகக் காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட வைக்க அனுமதிக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விதிகளை மீறி பேசி வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

 

இந்நிலையில்,  "தமிழக ஆளுநர் ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என எதைப் பற்றி பேசினாலும் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக தலைமையை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால் ஆளுநர் ரவி பதவி விலகி விட்டு இதுபோன்ற கருத்துக்களை சொல்லட்டும்" என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.   

 

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க இருக்கிறோம். அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் நாளைக்குள் அறிவாலயம் வந்து ஆளுநர் தொடர்பான மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்" என அழைப்பு விடுத்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.