Skip to main content

”ஒன்றிய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்கப்படும்” - திமுக வேட்பாளர் உறுதி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
DMK candidate KE Prakash assured that weakened textile sector will be revived

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில்  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் கேஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

ஏழைக்குடும்பங்களின் வறுமையைப் போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்களின் 100 நாள் திட்டமானது 150 நாள்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விவசாய பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு; கலைஞர் விழாவில் 200 விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகள்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Farm implements for farmers at kalaignar centenary function

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர்  ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.   

Farm implements for farmers at kalaignar centenary function

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி.  “வாடிய  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள்  அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.  

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.