Advertisment

‘மோடி சுட்ட வடை’ - திமுக வினோத பிரச்சாரம்!

DMK is campaigning in a strange way against BJP

இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்போடு காத்திருந்த 2024 நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜகவை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் கருத்து கணிப்பு நடத்துதல் அதன் முடிவுகளை வெளியிடுதல் எனத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisment

இதற்கிடையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள்2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிப் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. இதற்கிடையில், 2024 நாடாளுமன்றத்தேர்தல் குறித்து இந்தியா டுடே ஒரு சர்வே நடத்தியது. இந்தக் கருத்து கணிப்பின் முடிவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் எனத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஒரு சீட் கூட வங்க முடியாது எனக் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் கோடங்கி வேடமணிந்து நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என உடுக்கையடித்து, திமுக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த விசித்திரமான பிரச்சாரம் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

DMK is campaigning in a strange way against BJP

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், சென்னையில் மேலும்ஒரு விசித்திரமான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தைப் பார்க்கும் போதே பொதுமக்கள் சிரித்த முகத்தோடு வரவேற்பு தருகின்றனர்.திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் ஒரு விசித்திரமான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு, தங்கள் கைகளின் ஆள்காட்டி விரலில் வடையை மாட்டிக்கொண்டு சென்றபடி ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள கடைகளில் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், வாக்காளர்களுக்கு தாங்கள் எடுத்துச் சென்ற வடைகளைக் கொடுத்துவிட்டு, இத்தனை காலம் வடை வடையாய் சுட்டுக்கொண்டு இருக்கும் மோடிக்கு இனியும் வாக்கு அளித்து விடாதீர்கள் என்றும், ஏற்கனவே அவர் சுட்ட வடைகளை உண்ணவே ஆட்கள் இல்லை என்றும் மோடியை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் இந்த விசித்திர பிரச்சாரத்தை செய்துள்ளனர். இந்த விசித்திர பிரச்சாரத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் சிரித்தபடி வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இது குறித்து இந்தப் பிரச்சாரத்தை நடத்திய திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ. செல்வகுமாரிடம் கேட்டபோது, இந்திய பிரதமர் மோடிஆட்சிக்கு வந்த பிறகு வேலை வாய்ப்பில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால்தற்போதுதான் இந்திய மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிப்பதாகவும், சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை என அனைத்தும் பொதுமக்களை தினம் தினம் வாட்டி வதைத்து வருவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், தான் ஆட்சிக்கு வந்த உடனே அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் வந்து சேரும் எனக் கூறிவிட்டு இது நாள் வரை 5 பைசா கூட யாருக்கும் கொடுக்கவில்லை எனவும் கூறிய அவர், இதுபோன்று இந்த ஆண்டும் மோடி சுடும் வடைகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe