நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மத்தியில் பாஜக 300 தொகுதிகளுக்கும் மேலாக முன்னிலை பெற்று சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக 35 தொகுதிகளுக்கு மேலாக முன்னிலை பெற்று சென்று கொண்டிருக்கிறது.
திமுக கடைசியாக 2006 தேர்தலில் வென்று தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அதன் பின்பு நடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் 18 தொகுதிகளை வென்றது. அதிரடியான வெற்றி இல்லையென்றாலும் அதுதான் கடந்த முறை திமுக அதிக தொகுதிகளில் வென்றது. அதன் பின்பு நடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே வென்று சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தாலும் அதிமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்ததைக் கண்டு திமுக தொண்டர்கள் சோர்வுற்று இருந்தனர்.
இப்படி 2009க்குப் பிறகு கொண்டாடத்தக்க தேர்தல் வெற்றிகள் பெறாமல் திமுக இருந்ததால் கொண்டாட சந்தர்ப்பம் கிடைக்காமல் தொண்டர்களும் இருந்தனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு வெற்றிகரமாக இருக்கும் போக்கு தெரிவதால் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்து கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.