சிதம்பரத்தின் கைதை கண்டித்து ராகுலும் பிரியங்காவும் டிவிட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். டெல்லியில் இருந்த சீனியர் காங்கிரசார் பெரிய ரியாக்ஷன் காட்டவில்லை. தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார் சிதம்பரத்தின் ஆதரவாளரும் மாநில தலைவருமான கே.எஸ்.அழகிரி. சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தபோதும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், தங்கபாலு, விஜயதாரணி உள்பட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆப்சென்ட்.

Advertisment

congress

சிதம்பரத்தின் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களைத் திரட்டி சென்னையில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வலு காட்டினார். இந்திராகாந்தி முதல் பல காங்கிரஸ் தலைவர்களிடம் ப.சிக்கு செல்வாக்கு இருந்தாலும் அது, கட்சியினருக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதே காங்கிரசாரின் மனக்குமுறலாக இருக்கிறது. கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் கைது நடவடிக்கையை கண்டித்தார். பொதுவாக 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழியிலிருந்து தயாளு அம்மாள் வரை சிக்க வைக்கப்பட்டதில் தி.மு.க.வினருக்கு கோபம் உண்டு. அறிவாலயத்தில் கூட்டணி பேசிக்கொண்டே கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டின் காயம் உடன்பிறப்புகளுக்கு இன்னும் ஆறவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டது.