Skip to main content

'திமுக என்றுமே மக்கள் பக்கம்தான்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 'The DMK is always on the side of the people whether it is in power or not' - Chief Minister M. K. Stalin's speech

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''எச்சரிக்கை செய்தவர்கள் கூட இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கை செய்யவில்லை. மழை வரும், கனத்த மழை வரும், மழை காற்றுடன் மழை வரும், புயல் கற்றோடு மழை வரும் என்றுதான் எச்சரிக்கை சொன்னார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வெள்ளம் வரும், ஒரு நாள் முழுக்க விடாமல் மழை பெய்யும் என்றெல்லாம் கூட எச்சரிக்கை செய்யவில்லை.

இதுவரை 47 வருடத்தில் பார்க்காத ஒரு மழையை நாம் பார்த்தோம். எப்பொழுதுமே திமுகவை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்று சொன்னாலும் சரி மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி. நாம் பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். பல முறை ஆட்சியில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். ஆட்சியில் இருந்தபோதும் இப்படிப்பட்ட பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இல்லாத பொழுதும் இது போன்ற பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் நேரத்திலாவது நமக்கு இருக்கக்கூடிய அதிகாரம்; அந்த வசதிகள்; மீட்பு செயலில் ஈடுபடக்கூடிய கருவிகள் அவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிடும். அதை பயன்படுத்தி அந்த பணிகளை நிறைவேற்ற முடியும். ஆனால் ஆட்சியில் இல்லாத நேரத்தில் நாம் சந்தித்த பேரிடர் எப்படி எல்லாம் அந்த களத்தில் இறங்கினோம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

வேற ஒன்றும் வேண்டாம் கொரோனா என்ற ஒரு கொடிய நோய் வந்தது. அந்த கொடிய நோய் வந்த பொழுது நாம் எப்படி எல்லாம் சீரழிந்தோம்; எவ்வளவு பேரை இழந்தோம்; எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எல்லாம் ஆட்பட்டோம்; பொருளாதாரம் எந்த அளவிற்கு சீர்குலைந்து போச்சு; வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது;  வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை; தொழிலுக்கு போக முடியவில்லை; வேலைக்கு போக முடிவில்லை; பள்ளிக்கூடத்திற்கு போக முடியவில்லை; கடைக்கு போய் உணவு கூட வாங்குவதற்கான அந்த வசதி கூட இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருந்தது.

அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன செய்யவில்லை என்ன செஞ்சிருக்கணும் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையில்லை இப்பொழுது. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது 'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு அந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்ண உணவு; இருக்க இடம்; உடுத்த உடை; மருத்துவ வசதியை தேடி தேடி போய் அவர்களை தொடர்பு கொண்டு நாமாக வசதிகளை செய்து கொடுத்த கட்சிதான் திமுக என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள முடியும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story

'நகைக்காகப் பாசத்தைப் பொழிந்த மாமியார்; மருமகள் எடுத்த சோக முடிவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Mother-in-law who showered affection on jewelry; A sad decision taken by the daughter-in-law

நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மருமகள் மாமியார் இடையே ஏற்பட்ட சண்டையில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி. ஆட்டோ ஓட்டி வந்த பிரேம்குமார் டிவி ஷோரூமில் பணியாற்றி வந்த மஞ்சுளாவை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருமகள் மஞ்சுளாவை நன்கு கவனித்து வந்த மாமியார் சித்ரா, மஞ்சுளா அணிந்திருந்த 15 சவரன் நகைகளில் 12 சவரன் நகையை அவசர தேவைக்காக கேட்டுள்ளார்.

மஞ்சுளாவும் மாமியார் சித்ராவிற்கு நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நகையை திரும்பத் தரும்படி மாமியார் சித்ராவிடம் மஞ்சுளா கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பாசத்தை பொழிந்த மாமியார் சித்ரா மருமகள் மீண்டும் நகையை கேட்டதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அடிக்கடி மாமியார் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மணிமங்கலத்தில் தனியாக வீடு எடுத்து பிரேம்குமாரும் மஞ்சுளாவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன் பிரேம்குமாரிடம் நகையைக் கேட்டு வாங்கி தரும்படி மஞ்சுளா கேட்ட பொழுது பிரேம்குமாருக்கும் மஞ்சுளாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால்  வீட்டின் அறைக்குள் சென்ற மஞ்சுளா பல மணி நேரமாகியும் வெளியே வராததால் பிரேம்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்துக் கொண்டு சென்ற பொழுது உள்ளே மின்விசிறியில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மஞ்சுளாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து, உடனடியாக தன்னுடைய மகளின் உயிரிழப்பு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.