Skip to main content

“அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும்” - பிரேமலதா 

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
dmdk will form an alliance with the party that gets the most seats Premalatha

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து  தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், திரை உலகினருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். விஜயகாந்திற்கு அரசு மரியாதை அளித்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செயலாளர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடனும், மற்றொரு தரப்பினரோ அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்