
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.