
சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் நெல்லையில் அரசு பள்ளியில் சக மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பள்ளக்கால் பொதுக்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அந்த சுற்றுவாட்டார பகுதியைச் சேர்ந்த பலர் பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த செல்வசூர்யா என்ற மாணவனுக்கும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவனுக்கும் இடையே கையில் சமூகத்தை குறிப்பிடும் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தரப்பு தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் செல்வசூர்யாவை கல்லால் தாக்கியதில் காதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாணவன் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரித்து வரும் பாப்பாக்குடி காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதிக்காக பள்ளி மாணவர் கொல்லப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பள்ளி மாணவன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. பள்ளி மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகள் மேலோங்கி இருப்பது வேதனையளிக்கிறது"எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)