Skip to main content

"தே.மு.தி.க. தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது" - விஜயபிரபாகரன் பேட்டி!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

dmdk party vijayakanth son press meet at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன. 

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியது. மேலும், அதிமுக- பா.ம.க.வுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க., த.மா.கா., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி. உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதில் தே.மு.தி.க. தரப்பு பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டை அ.தி.மு.க. தரப்பிடம் கேட்டு வருவதால் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

 

dmdk party vijayakanth son press meet at chennai

 

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளித்தார். இருப்பினும், அந்த மனுவில் எந்த தொகுதியில் போட்டி என்பது குறிப்பிடவில்லை. 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஜயபிரபாகரன், "எங்கு போட்டியிட்டாலும் தே.மு.தி.க. தொண்டர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள். தே.மு.தி.க. தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது" என்றார். 

 

இதனிடையே, இன்று (04/03/2021) காலையில் விருப்ப மனு அளித்திருந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் போட்டியிடும் தொகுதியைக் குறிப்பிடவில்லை.

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி? - வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தே.மு.தி.க.

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Which constituency for Vijaya Prabhakaran?-dmdk released the list of candidates

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விருதுநகர் - விஜய பிரபாகரன், மத்திய சென்னை - பார்த்தசாரதி, திருவள்ளூர் - நல்லதம்பி, கடலூர் - சிவக்கொழுந்து, தஞ்சை - சிவனேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை.

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி; தேமுதிக அலுவலகம் வந்த எடப்பாடி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Vijaya Prabhakaran in Virudhunagar; Edappadi came to the DMDK office

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.

மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.