ADVERTISEMENT

தேமுதிக விவகாரம்: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்

12:58 PM Mar 07, 2019 | rajavel

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் அழுத்தம் காரணமாக தேமுதிகவுக்காக கூட்டணியை இறுதி செய்யாமல் வைத்துள்ளது அதிமுக தலைமை.

ADVERTISEMENT

''தேமுதிக நிச்சயம் நம்ம கூட்டணிக்குத்தான் வரும் ஆகையால் அவர்கள் கேட்கும் தொகுதிகளை பரிசீலியுங்கள்'' என்று அதிமுக தலைவர்களிடம் கூறி வந்தது பாஜக. இதனால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


அதிமுக ஒதுக்கும் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தேமுதிக, பாமகவைவிட அதிக தொகுதிகளை ஒதுக்கித் தருமாறு தொடர்ந்து தனது கருத்தை கூறி வந்தது. இதனால் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் திடீரென திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது பாஜக தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளனர். ''பாஜகவின் அடிமை அதிமுக என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது. நாங்கள் அப்படியில்லை பாஜகவுக்கு 5 தொகுதிகளைத்தான் ஒதுக்கியுள்ளோம் என்று உங்கள் திறமையை காட்டினீர்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் கூட்டணி கட்சிகளுக்குபோக திமுக போட்டியிடும் 20 தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். வட மாட்டங்களில் கண்டிப்பாக அதிமுக போட்டியிட வேண்டும். துணை முதல்வராக இருக்கும் நீங்களே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தேமுதிக நிர்வாகிகள் திமுகவிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களும் தங்களது முடிவை தெளிவாக கூறியுள்ளனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 5 தொகுதியில் போட்டியிடுகிறது என்று பியூஸ்கோயல் கூறுகிறார். ஆனால் எங்கள் கூட்டணி பாஜகவுடன்தான் என்று நம்மை மதிக்காமல் பேசுகிறது தேமுதிக. ஜெயலலிதா இருந்தபோதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன்தான் பங்கேற்றார். அவரும் இப்போது அதிமுகவில் உள்ளார். இப்போதே அவர்கள் அதிமுக மேடையில் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்கிறார்கள். நாம் அவர்களுக்காக வேலை செய்வோம், அவர்கள் நமக்காக வேலை செய்யமாட்டாங்கன்னுதானே அர்த்தம். அப்படி பேசும் தேமுதிகவிடம் நாம் இறங்கி போக வேண்டுமா?


எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் இதுகுறித்து நம்மை விமர்சிப்பதை விட்டுவிடுங்கள். நம்ம கட்சிக்காரர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். நம்ம எம்.பி. அன்வர்ராஜா, அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்ட ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தற்போது அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இனி ஒவ்வொருவராக பேச ஆரம்வித்துவிடுவார்கள். இனி முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT