ADVERTISEMENT

“தே.மு.தி.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதி?” - எஸ்.பி. வேலுமணி சூசகம்

06:50 PM Mar 01, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த 7 ஆம் தேதி (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மாவட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க.வுடனும் மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘கூட்டணி உறுதி என எடுத்துக் கொள்ளலாமா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.பி. வேலுமணி, “நேரடியாக வந்து சந்தித்து பேசியதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்” என சூசகமாகப் பதிலளித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT