“த.வெ.க. தலைவர் விஜய் மீது எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை” - திவ்யா சத்யராஜ்!

Divya Sathyaraj says There is no personal enmity against TVK leader Vijay 

நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாகத் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்தார். அதன் பின்பு அவருக்கு தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாநில துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து திவ்யா சத்யராஜ், த.வெ.க.வையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும் கடுமையாகச் சாடி வருகிறார். இதற்குப் பதிலடியாக விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் திவ்யா சத்யராஜைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க, தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் என் பணிவான வணக்கம். திமுக அரசு மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பெட்ரோல் விலை குறைப்பு, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கட்டணம் இல்லாமல் மகளிர் பேருந்து, மாவட்டந்தோறும் டைட்டல் பார்க் இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவு திமுக அரசுக்கு மட்டும் மட்டும்தான் உள்ளது. பாஜக போன்ற பலவீனமான கட்சிகளுக்குத் தமிழ்நாட்டைப் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லை.

ஒரு நல்ல தலைவருக்கு இந்தியாவை மட்டுமல்ல, முழு நாட்டையும் பொறுமையாகவும் திறமையாகவும் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்களுக்கும், அவருடைய கட்சியில் இருந்து வெளியே வந்த பெண்களுக்கும் அவருடைய தொண்டர்கள் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதை அந்த பெண்ணின் அம்மா ஒரு சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார். உங்களுக்குப் பாதுகாவலர்கள் இருப்பது போல அவர்களுக்கு (பெண்களுக்கு) பாதுகாவலர்கள் இல்லை. ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் இதையெல்லாம் தடுக்க வேண்டும். ஒரு திறமையான அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

divya sathyaraj Tamilaga Vettri Kazhagam tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe