ADVERTISEMENT

மா.செ. நியமனம் எப்போது? ஏங்கும் வேலூர் அ.தி.மு.க.-வினர்!

06:42 PM Jun 14, 2020 | rajavel

ADVERTISEMENT


தமிழகத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்த வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. இதற்காகப் பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள் என நடத்திப்பார்த்தனர்.

ADVERTISEMENT


தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மா.செவால், ஒரு மாவட்ட தலைவரால் நிர்வாகம் செய்ய முடியாது என கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது. திமுக அதனை கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாகப் பிரித்தது வைத்திருந்தது. காங்கிரஸ் 3 மாவட்டமாக, பா.ஜ.க. 2 மாவட்டமாக, பா.ம.க. 6 மாவட்டமாகப் பிரித்து நிர்வாகம் செய்தது.

அரசின் சார்பில் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2019 அக்டோபர் மாதம் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதியதாக திருப்பத்தூர், இராணிப்பேட்டை என உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் என 50 சதவித நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுவிட்டனர்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகளும் புதியதாக உருவான மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்களை, மாவட்ட தலைவர்களை நியமித்துவிட்டது. ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க. மட்டும் இதில் தடுமாறிக்கொண்டு இருக்கிறது என புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், வேலூர் மாவட்டத்திற்குக் கிழக்கு, மேற்கு என கட்சி சார்பில் இரண்டாக பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணி நடந்து வந்தது. கிழக்கு மா.செவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியும், மேற்கு மா.செவாக அமைச்சர் வீரமணியும் இருந்துவந்தனர். இப்படி கிழக்கு, மேற்காக பிரித்ததிலேயே ஏகப்பட்ட குழப்பம் எங்க கட்சியில் இருந்துவந்தது. அதாவது வேலூர் மாநகரம் மேற்கு மாவட்டத்துக்குள் இருந்தது. வேலூர் மாநகரத்துக்குள் வரும் காட்பாடி தொகுதி கிழக்கு மாவட்டமாக இருந்தது. அதெல்லாம் புதிய மாவட்டம் உருவாக்கத்திற்குப் பின் தீர்ந்துவிடும் என நினைத்தோம், இப்போது வரை அந்தப் பிரச்சனை தீரவில்லை.


மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதும், வேலூர் கிழக்கு மா.செவாக இருந்த ரவி, ராணிப்பேட்டை மா.செவாக மாறிவிட்டார். வேலூர் மேற்கு மா.செவாக இருந்த அமைச்சர் வீரமணி, திருப்பத்தூர் மா.செவாக மாறிவிட்டார். வேலூர் மாவட்டத்துக்கு மா.செ என யாரும் இல்லாமல் உள்ளது. அதுமட்டும்மல்ல கட்சி கழக அமைப்பும் இங்கு இல்லை.

அதாவது மேற்கு மாவட்டமாக இருந்தபோது வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளில் இருந்த சீனியர் கட்சியினர் மாவட்ட கமிட்டியில் நிர்வாகிகளாக இருந்தார்கள். இப்போது மாவட்டம் பிரிக்கப்பட்டபின்பு அவர்கள் எந்தப் பொறுப்பில் உள்ளார்கள் என்கிற குழப்பம் ஏற்படுகிறது.

கடந்த டிசம்பரல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது, முக்கிய நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ்சிடம், வேலூருக்கு புதிய மா.செவை நியமியுங்கள், கட்சி மாவட்ட கமிட்டியை அமையுங்கள் எனச் சொன்னார்கள், அவர்கள் அதனைச் செய்ய முயன்றபோது, அமைச்சர் வீரமணி தடுத்துவிட்டார்.

அரசின் சார்பில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்பதற்காகக் கட்சி நிர்வாகத்தை மாற்ற வேண்டிய அவசியம்மில்லை. முன்பு இருந்ததுபோலவே இப்போதும் கிழக்கு, மேற்கே இருக்கட்டும் எனத் தடுத்துவிட்டார். அவர் சொன்னதை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும் கேட்டுக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள். கட்சி நிர்வாக ரீதியாக கிழக்கு – மேற்காகவே இருக்கட்டும் எனச்சொன்ன அமைச்சர் வீரமணி, வேலூர் மாவட்டத்திற்கு வந்து நிவாரண பணிகளில் அவ்வளவாக ஈடுப்படவேயில்லை. தருபவர்களையும் ஒருங்கிணைக்கவில்லை. அவர் திருப்பத்தூர் மாவட்டத்தோடு சுருங்கிக்கொண்டார். இதனால் கட்சிக்கு தான் இங்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றார்கள்.


மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது முதல் வேலூர் மா.செ பதவியைப் பிடித்துவிட வேண்டுமென அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் தலைமையிடம் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர். தங்களுக்கு தான் மா.செ பதவி எனக் கனவும் கண்டுவருகின்றனர். ஆனால் அவர்களின் கனவு நீண்ட மாதங்களாகக் கனவாகவே இருந்துவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT