
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் என்பதால் கட்சியை சரிவில் இருந்து மீட்டு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தேமுதிகவுக்கு வாக்கு வங்கி உள்ள 7 தொகுதிகளை தேர்வு செய்துள்ள தேமுதிக, அதில் குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் அளிக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.