Skip to main content

கொடூரமானவர்கள் வரிசையில் இந்துக்கள்... இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

pa.ranjith

 


இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் இந்துக்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை ரி-ட்வீட் செய்துள்ளார். அவர் தொடங்கியுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் ட்விட்டர் கணக்கில் வெளிவந்துள்ள ஒரு ட்வீட்டில் ’உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். ’இந்துக்கள்’ என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது. திருமாவளவன் அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது சாதி ஒழிப்பில் பின்தங்கிப் போனது, மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே நினைத்தது, பெரியாரை-அண்ணலை கொண்டு சேர்க்காதது.. என்பவற்றால் இன்று வலதுசாரித் தன்மை கொண்ட இரண்டு தலைமுறைகள் வளர்ந்திருக்கிறது. இவர்கள்தான் இன்று உண்மையாக இருப்பதை கூறியதற்கு கண்மூடித்தனமான அவதூறுகளை செய்பவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இதனை ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ளார்.

மேலும் ’ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமாவளவன் அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை’ என்ற ட்வீட்டையும் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.